2வது நாளாக வேலை நிறுத்தம்…! 30% போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மெமோ வழங்க நடவடிக்கை!
15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
இந்த சூழலில், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனால், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
இதனால் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இருப்பினும், தமிழகம் முழுவதும் மக்கள் பாதிப்பின்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். அதேபோல் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில்கொண்டு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு வர வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 2வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. இதனால், இன்று 2வது நாளாக பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் 30% போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மெமோ வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு போக்குவரத்துத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனிடையே, தமிழகம் முழுவதும் 97.7 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பேருந்து சேவை சீராக இயக்கப்பட்டு வரும் நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பேருந்து இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ அல்லது பேருந்துகளை மறிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.