சற்று முன்…துரோகி ஓபிஎஸ்;பொருளாளர் பதவியில் நீடிப்பாரா? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முக்கிய தகவல்!
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது.அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்து ஓபிஎஸ் புகைப்படம் கிழிக்கப்பட்டுள்ளது.
ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பேனர்களை கிழித்தெறிந்ததால் தலைமை அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.மேலும்,அலுவலகத்திற்கு வெளியே ஈபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக வேண்டும் என தொண்டர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.இதனிடையே,அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும்,கேபி முனுசாமி அல்லது திண்டுக்கல் சீனிவாசன் அப்பதவியில் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,அதிமுக பொருளாளர் பதவியில் ஓபிஎஸ் நீடிப்பாரா? என்பது அடுத்த பொதுக்குழுவில் தெரியும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்:”அதிமுக தலைமை அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பேனரை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனினும், ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளம்,துரோகம் அவர் உடன்பிறந்த ஒன்று. அவரது துரோகங்களுக்கு நிறைய உதாரணங்கள் உண்டு.அதிமுகவுக்கு அவர் பல துரோகங்கள் செய்துள்ளார்.அந்த வகையில்,அம்மா மறைவுக்கு பிறகு நடந்ததை பாருங்கள்.குறிப்பாக, ஓபிஎஸ் மகன் அண்மையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை அர்ப்பணிப்பு உணர்வுடன் சந்தித்ததை எந்த தொண்டரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்.
அதிமுக பொருளாளர் பதவியில் ஓபிஎஸ் நீடிப்பாரா? அல்லது நீக்கப்படுவாரா? என்பது ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவில் தெரியும்.மேலும்,இன்றைய சென்னை அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 74 தலைமைக்கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர்.வரும் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்பட்டது”,என்று தெரிவித்துள்ளார்.