பெற்ற தந்தையை சொத்துக்காக டிராக்டர் ஏற்றி கொலை செய்த கொடூர மகன்.!
- செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சொத்துத் தகராறில் பெற்ற தந்தையை மகனே டிராக்டரை ஏற்றி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்.
- உடன்பிறந்த சகோதரிகளுக்கும் சொத்தை பிரித்து கொடுத்ததால் ஆத்திரத்தில் கொலையை அரங்கேற்றியவனை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் அடுத்த முருகம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலைக்கு 3 மகள்கள் 2 மகன்கள் என 5 பிள்ளைகள் உள்ளன. அவருக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை 3 ஏக்கர் வீதம் 5 பேருக்கும் சமமாக எழுதி வைத்திருக்கிறார். பின்னர் 2 மகன்களில் இளையவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படும் நிலையில், அவரது நிலத்தையும் மூத்தவரான ஏழுமலையே அனுபவித்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தன் சகோதரிகள் மூவருக்கும் தலா 3 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தது ஏழுமலைக்கு பிடிக்கவில்லை.
இதனிடையே, சகோதரிகள் மூவருக்கும் தலா ஒரு ஏக்கர் மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள நிலத்தை தனக்கே எழுதிக் கொடுக்குமாறு தந்தையிடம் கேட்டு, ஏழுமலை தொல்லை செய்து வந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். அதற்கு அண்ணாமலை சம்மதிக்காததால், அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று வயலில் வேலை செய்துகொண்டிருந்த அண்ணாமலையின் மீது டிராக்டரைக் கொண்டு மோதி கொலை செய்துவிட்டு ஏழுமலை தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் தந்தை அண்ணாமலையின் உடலைப் பார்த்து மகள்கள் மூவரும் கதறியழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது. தகவலறிந்து வந்த போலீசார், அண்ணாமலையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்பு உடன்பிறந்த சகோதரிகளுக்கு சொத்தை எழுதிக் கொடுத்ததற்காக பெற்ற தந்தையையே கொலை செய்த கொடூரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.