அன்று கலைஞர்.. இன்று டி.ஆர்.பாலு.! அண்ணாமலைக்கு ஓராண்டு சிறை உறுதி.! திமுக திட்டவட்டம்.!
கலைஞர் அவதூறு வழக்கில் வென்றது போல இன்று டி.ஆர்.பாலு அவதூறு வழக்கில் வெற்றி பெறுவார். என திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்பி.பாரதி கூறினார்.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக சொத்து பட்டியல் என ஒரு விடியோவை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார். அதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவதூறு பரப்புவதாக கூறி , மன்னிப்பு கோரியும், மான நஷ்டஈடு வழங்க கோரியும் திமுகவினர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி வந்தனர்.
அண்மையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை பரப்பி இடையூறு செய்வதாக கூறி அவதூறு வழக்கு ஒன்றை தமிழக அரசு சார்பில் பதிவு செய்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, இன்று திமுக எம்பி டி.ஆர்.பாலு , அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இதுபற்றி திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவினர் பற்றி பொய்யான அவதூறு தகவல்களை பரப்பி விட்டார்.
இதனை எதிர்த்து, திமுக சார்பில் பதில் கேட்டு அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி ஒருமாத காலம் அவகாசம் தந்துவிட்டோம். இதுவரை அவதூறுகள் பற்றி உரிய பதில் தரவில்லை. ஏற்கனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று சைதை நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு சார்பில் அவதூறு தாக்கல் செய்யபட்டுள்ளது.
திமுகவுக்கு யார் மீதும் பொய்வழக்கு போட்டு பழக்கமில்லை. இதற்க்கு முன்னர், 1962-63 காலகட்டத்தில் கலைஞர் ( மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி) மீது நாத்திகம் எனும் பத்திரிகையில் பத்திரிகையாளர் ராமசாமி என்பவர், ‘பூம்புகார்’ என்ற படத்தை கலைஞர், திமுக கட்சி பணத்தில் இருந்து தயாரித்தார் என பொய்யாக எழுதினார். அதனை எதிர்த்து கலைஞர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் நாத்திகம் ராமசாமிக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. அதே போல அண்ணாமலைக்கு ஓராண்டு சிறைதண்டனை கிடைக்கும் என திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.