சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி : ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் ….!
ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் இடையே மண்சரிவு ஏற்பட்டு, ரயில் பாதையில் பாறாங்கல் உருண்டு விழுந்தது.
இதனால் ரயில் பாதை முழுவதும் மூடப்பட்ட நிலையில், பாதையோரத்தில் இருந்த மரங்களும் வேரோடு சாய்ந்து ரயில் பாதையின் குறுக்கே விழுந்தது. இதன் காரணமாக ஊட்டி மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனை சீரமைக்கும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தனர். தற்பொழுது இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம்போல இன்று காலை 7.10 மணிக்கு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து வருகின்றனர்.