புரட்டி போடும் கனமழை! எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
வலுப்பெற்ற தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று இரவு வலுப்பெற்றதென வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இதன் விளைவாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது.
கனமழையின் தீவிரத்தால் இன்று புதுச்சேரி, சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். அதில், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.
அதே போல புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும், சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் மட்டும் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.
இதில், புதுச்சேரி, காரைக்கால், சென்னை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையின் காரணமாக நேற்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றைய தினமே விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (17.10.2024) அதிகாலை மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையில் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.