பல் பிடுங்கிய விவகாரம்..! இரண்டாம் கட்ட விசாரணை நிறைவு..!
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், 2ம் கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்களின் அங்கு பணியில் இருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் மற்ற காவல் அதிகாரிகள் துன்புறுத்தி அவர்களின் பற்களை பிடுங்கிதாக புகார்கள் எழுந்தது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மார்ச் 29ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
விசாரணை கைதிகளின் பற்களை பிடிங்கி துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக, முதற்கட்ட விசாரணை முடிவடைந்து 17 மற்றும் 18ம் தேதிகளில் 2ம் கட்ட விசாரணை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கபட்டிருந்தது
தற்போது, உயர்மட்ட விசாரணைக் குழு அதிகாரி அமுதா ஐஏஎஸ் தலைமையில் கடந்த 2 நாட்கள் நடைபெற்ற 2ம் கட்ட விசாரணை இன்று நிறைவடைந்துள்ளது. இந்த விசாரணையில் 2 நாட்களில் 14 சாட்சியங்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். அதில், 11 பேர் முதல் நாளிலும் 3 பேர் இரண்டாவது நாளிலும் அம்பாசமுத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சாட்சியளித்துள்ளனர்.