பல்லை பிடுங்கி சித்திரவதை – மனித உரிமை ஆணையம் விசாரணை!
விசாரணை கைதிகளின் பற்களை பல்வீர்சிங் பிடுங்கிய புகார் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரணை.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் பற்களை காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் உடைத்து, பிடுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டங்களை தெரிவித்ததோடு விசாரணைக் கைதிகளின் பல்லை உடைத்தும், வாயைக் கிழித்தும் கொடுமை செய்த காவல் உதவி கண்காணிப்பாளரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்ததை அடுத்து, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். மேலும், இவ்விவகாரத்தில் உதவி ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், நெல்லை அருகே விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கி ஏ.எஸ்.பி. பல்பீர் சிங் சித்திரவதை செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்விகாரம் தொடர்பாக ஏ.எஸ்.பி. பல்பீர் சிங் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. அதன்படி, மனித உரிமை ஆணையத்தின் ஐ.ஜி. விசாரணை நடத்தி 6 வாரத்தில் அறிக்கை சமர்பிக்கும்படி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.