நாளைய மாநாடு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எடுத்துக்காட்டு! – அதிமுக எம்பிக்கள் பேட்டி!
மதுரையில் நாளை அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால், ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தங்களின் பலத்தையும், செல்வாக்கையும் காட்டும் வகையில் மாபெரும் மாநாடாக இந்த எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் பேருந்துகள் மற்றும் கார்கள் மூலம் மதுரைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். மதுரை மாநாட்டில் சுமார் 15 லட்சம் அதிமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில, மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்திப்பில் அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, சிவி சண்முகம் பேசினார். இதில் தம்பிதுரை எம்பி கூறுகையில், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்.
இது நன்றாகவே பாஜகவுக்கு தெரியும். அதனால் தான் நாளை மாநாடு தமிழ்நாடு, இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்றார். கூட்டம் யார் வேண்டுமானாலும் போடலாம், அது ஜனநாயகத்தின் உரிமை என திமுக உண்ணாவிரத போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். மேலும், நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்று உலகத்துக்கே தெரியும். 2010ல் மத்தியில் திமுக அங்கம் வகித்த கட்சி தான் நீட் தேர்வை கொண்டுவந்தது. 2012ல் திமுக அங்கம் வகிக்கும் கட்சி ஆட்சியில் இருந்தபோதே நீட் தேர்வும் நடத்தப்பட்டது.
இந்திரா காந்தி அவர்கள் கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு கொண்டு வந்தது தான் இதற்கு காரணம். 19 ஆண்டு காலமாக திமுக என்ன செய்து கொண்டிருந்தது. எனவே தமிழர்களின் உரிமைக்காக பாடுபட்ட ஒரே இயக்கம் அதிமுக தான். திமுக நாடகம் நடத்தி வருகிறது. நீட் தேர்வுக்கு தீர்வே காண முடியாது, மக்களை ஏமாற்றி மாணவர்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டு, இப்போது நாடகம் நடத்தி வரும் இயக்கம் தான் திமுக என விமர்சித்தார். நாடகத்துக்கு பேர் போனது திமுக தான், குடும்பமே நாடகம் தான் எனவும் கூறினார்.
நீட் தேர்வு ரத்து செய்வதற்கு அதிமுக முறைப்படி முயற்சி செய்தோம். இன்றைக்கும் அதிமுகவை பொறுத்தவரையில் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களின் நிலைபாடு, நீட் தேர்வுக்கு ஆதரவு கிடையாது என்றார். எனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நாளை மதுரையில் நடைபெறும் மாநாட்டை யாராலும் திசை திருப்ப முடியாது எனவும் கூறினார்.
தம்பிதுரையை தொடர்ந்து சிவி சண்முகம் எம்பி கூறுகையில், நீட் மற்றும் கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு யாருக்கு உரிமை இருகிறோதோ இல்லையோ, திமுகவுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் எந்த தகுதியும் கிடையாது, நீட் கொண்டுவந்தது திமுக தான், கச்சத்தீவை விட்டுக்கொடுத்து திமுக தான். இதனால் இவைகள் குறித்து பேசுவதற்கு திமுக எந்த தகுதியும் இல்லை. இவர்களது மோசடி நாடகத்தை பார்ப்பதற்கு மக்கள் தயாராக இல்லை எனவும் கடுமையாக தாக்கி பேசினார்.