#BREAKING : நெருங்கிய நிவர் புயல் ! நாளை தீவிர புயலாக வலுப்பெறும் – வானிலை ஆய்வு மையம்
சென்னையை நெருங்கும் நிவர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நிவர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை தீவிர புயலாக மாறக்கூடும் .சென்னைக்கு தென்கிழக்கே 520 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர் புயல்,புதுச்சேரியின் தென்கிழக்கே 500 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.நவம்பர் 25 ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கும்.புயல், கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 26-ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மேலும் புயலின் காரணமாக 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் டெல்டா மற்றும் வட தமிழக மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதீத கனமழை பெய்யக்கூடும்.வட கடலோர மாவட்டங்களிலும் கன மழை பெய்யும். சென்னையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாகை,திருவாரூர்,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது .25-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.