Toll Hike: சுங்கக்கட்டண உயர்வு..! தேமுதிக சார்பில் செப்.9 -ல் முற்றுகை போராட்டம்.!
தமிழகம் முழுவதும் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், சில சுங்கச்சாவடிளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. 2023-ம் ஆண்டுக்கான புதிய கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் மீதமுள்ள 20 சுங்கச்சாவடிகளில் நேற்று (செப் 1-ம் தேதி) நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் நடைமுறைக்கு வருகிறது. பாஸ் டேக் இல்லாத வாகனங்கள் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.
அதன்படி, அதில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 85 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக உயர்ந்துள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2505 லிருந்து 2740 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.290-லிருந்து 320 ரூபாயாகவும், இருமுறை சென்றுவர 440ல் இருந்து 480 ரூபாயாகவும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சுங்கக்கட்டண உயர்விற்குக் கண்டனம் தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சுங்க கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவில்லை என்றால், அனைத்து சுங்க சாவடிகளை முற்றுகையிட்டு தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி, தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து தேமுதிக சார்பில் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 10 மணி அளவில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட சுங்கச்சாவடிகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.