சுங்கச்சாவடி கட்டண உயர்வு இன்று முதல் அமல்.! வாகன ஓட்டிகள் அதிருப்தி…
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வானகரம், பரனூர், செங்கல்பட்டு, சூரப்பட்டு உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) முடிவின்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன.
இதில், 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவை செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு (மார்ச், 31) நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய கட்டண நடைமுறை, அடுத்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, வானகரம், செங்கல்பட்டு, பரனூர், திண்டிவணம், ஆத்தூர், சூரப்பட்டு உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.75 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சுங்கக் கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது, ஏனெனில் போக்குவரத்து செலவு அதிகரிப்பு காரணமாக பொருட்களின் விலையும் உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.