Today’s Live:கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.! ஒன்றிய அரசு அறிவுறுத்தல்…
மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்:
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சுவாசப் பிரச்சனை அதிகம் உள்ளது. கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது, இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஸ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.
தகுதி நீக்கம் தொடர்பாக ராகுல் காந்தி பேட்டி:
நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுவதாக நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன். இதற்கான உதாரணங்களை தினம் தினம் பார்த்து வருகிறோம். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவு குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டேன்.
இந்திய ஜனநாயகத்திற்காக நான் போராடி வருகிறேன். சிறை தண்டனை, தகுதி நீக்கத்தை பார்த்து ஒருபோதும் நான் பயப்பட மாட்டேன். ஆனால், அதானி குறித்த எனது பேச்சுகளுக்கு பிரதமர் பயப்படுகிறார். அதை அவர் கண்களில் பார்த்திருக்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசி வருகிறார்.
25.03.2023 1.35 AM
ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து அசாம் முதல்வர் பேட்டி:
ராகுல் காந்தியை அரசு தகுதி நீக்கம் செய்யவில்லை. தனது உரையில், ஓபிசி சமூகத்திற்கு எதிராக அவர் பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பின் விளைவாக, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது நீதித்துறை செயல்முறை, இதில் அரசியல் எதுவும் இல்லை என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
25.03.2023 1.00 AM
ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த ரவிசங்கர் என்பவர், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து, அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால், அதிக அளவிலான தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் 41 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது, போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்னர்.
25.03.2023 12.40 AM
பாலியல் புகார் மீது நடவடிக்கை:
சென்னை கலாஷேத்ரா மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை காவல் ஆணையருக்கு டிஜிபி சயிலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
25.03.2023 11.55 AM
மாநிலங்களவை முன் மவுனப் போராட்டம்:
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், மாநிலங்களவைக்கு வெளியே வாயில் கருப்பு துணி கட்டி மவுனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
25.03.2023 11.25 AM
வயநாடு தொகுதி காலியானதாக அறிவிப்பு:
ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, கேரளாவின் வயநாடு தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மக்களவை செயலகம் வெளியிட்ட அறிக்கையில், ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை தொடர்ந்து, மக்களவையில் காலி இடங்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், வயநாடு தொகுதி குறித்து தேர்தல் ஆணையத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
25.03.2023 10.56 AM