பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை… மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!
இன்று யார் யாரோ பெரியாரை பற்றி பேசுகிறார்கள். அவர்களை நான் அடையாளப்படுத்த விரும்பவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இந்த பொங்கல் நிகழ்வில் முதலமைச்சர் பேசுகையில், ” 13ஆம் தேதி போகி பண்டிகை, 14 பொங்கல், 15இல் மாட்டு பொங்கல் (திருவள்ளுவர் தினம்), 16இல் உழவர் தினம். 17ஆம் தேதியையும் விடுமுறை தினமாக கையெழுத்திட்ட கை இந்த கை. திமுக தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றம் செய்யப்பட்டுவிட்டன. ஒரு சில வாக்குறுதிகள் மட்டும் இருக்கிறது. விரைவில் அதுவும் நிறைவேற்றம் செய்யப்படும்.
திமுக இதுவரை 6முறை ஆட்சியில் அமர்ந்துள்ளது. 7வது முறையும் நாம் தான் ஆட்சி. இது பதவி சுகத்திற்காக அல்ல. மக்களுக்கு பணியாற்ற தொண்டாற்ற வர வேண்டும் என்பதற்காக 7வது முறையும் ஆட்சிக்கு வர வேண்டும். ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று அர்த்தம் என்று தான் கலைஞர் எனக்கு பெயர் வைத்தார். ” என்று பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அடுத்து பேசிய அவர், ” தமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் தினம் தான் அன்றைக்கே பெரியார் கூறினார். இன்றைக்கு யார் யாரோ பெரியாரை விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் யார் யார் என நான் அவர்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை. தந்தை பெரியார் தனது உயிர் பிரியும் கடைசி நிமிடம் வரை சமூக நீதிக்காக போராடியவர். ” என்று குறிப்பிட்டார் மு.க.ஸ்டாலின்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். அவருக்கு எதிராக பல்வேறு மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளை அவர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.