“புலவர் புலமைப்பித்தன் விடுதலைப்புலிகளுக்கும்,எம்.ஜி.ஆர்.க்கும் உறவுப் பாலமாகச் செயல்பட்டவர்” – சீமான்…!
இன்று மறைந்த புலவர் புலமைப்பித்தன் விடுதலைப்புலிகளுக்கும், எம்.ஜி.ஆர்.க்கும் உறவுப் பாலமாகச் செயல்பட்டவர் என்று சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அவைத் தலைவரும், பாடலாசிரியருமான புலமைபித்தன்(86) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,அவரது மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“புகழ்பெற்ற கவிஞர்,திரைப்பாடலாசிரியர்,பேரவைப் புலவர்,மூத்த அரசியல்வாதி, எனப் பன்முக ஆளுமை கொண்ட ஐயா புலவர் புலமைப்பித்தன் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஐயா புலவர் புலமைப்பித்தன் அவர்கள்,தமிழ்த்தேசிய இனத்தின் முகமாக முகவரியாக அடையாளமாகத் திகழும் நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது மிகுந்த பற்று கொண்டு அவரை நேசித்தவராவார். அதேபோல் நமது தேசியத் தலைவரும் ஐயா புலமைப்பித்தன் அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் பேரன்பும் கொண்டிருந்தது என்றென்றும் நினைவுகூரத்தக்கது.
தமிழர்களுக்கென்று இந்தப் பூமிப்பந்தில் ஒரு நாடு உருவாக வேண்டும் என்ற புனித இலட்சியத்தோடு போராடியத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அந்தக் காலத்திலேயே கோடிக்கணக்கான ரூபாய்கள் அள்ளிக் கொடுத்து நம் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் ஆதரவு அளித்த முன்னாள் தமிழக முதல்வர் ஐயா எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உற்ற செயல் வீரராக இருந்து விடுதலைப்புலிகளுக்கும்,எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் உறவுப் பாலமாகச் செயல்பட்டவர் ஐயா புலமைப்பித்தன் அவர்கள்.
என்னுயிர் அண்ணன் நம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் ஐயா புலமைப்பித்தன் அவர்களது இல்லத்திலேயே தங்கி ஈழவிடுதலைப் போராட்டத்திற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்ட காலங்கள் தமிழின வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
தன் இறுதிக் காலம் வரை கொள்கை மாறாத உறுதியோடு திகழ்ந்த ஐயா புலமைப்பித்தன் அவர்கள், பத்திரிகையாளராக. திரைப்படப் பாடலாசிரியராக, பேரவைப் புலவராக, அரசியல் ஆளுமையாக, நாடறிந்த நற்றமிழ் பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்ட மாபெரும் தமிழின ஆளுமையாகத் நிகழ்ந்தவர்.
ஆயிரம் நிலவே வா. நான் யார் நான் யார். ஓடி ஓடி உழைக்கணும், சிரித்து வாழ வேண்டும். போன்ற அவர் எழுதிய பல நூறு திரைப்படப் பாடல்கள் காலத்தால் அழியாத காவியத் தன்மை கொண்டவை. ஐயாவின் மறைவு தமிழ்த்தேசிய இனத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும்.
ஐயா புலமைப்பித்தன் அவர்களை இழந்து வாடும் அவரது உற்றார் உறவினர். நண்பர்கள்உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கிறேன்.
ஐயா புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்!”,என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்குப் பேராதரவு அளித்த முன்னாள் முதல்வர் ஐயா எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உற்ற செயல்வீரராக இருந்து விடுதலைப்புலிகளுக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் உறவுப்பாலமாகச் செயல்பட்ட ஐயா புலமைப்பித்தன் அவர்களது மறைவு தமிழ்த்தேசிய இனத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும். pic.twitter.com/2ASvN5B8Ff
— சீமான் (@SeemanOfficial) September 8, 2021