அதிர்ச்சி…அதிகரித்த கச்சா எண்ணெய் விலை – லிட்டருக்கு ரூ.25 உயர்ந்த டீசல் விலை!
பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
மாற்றமில்லை:
இந்நிலையில்,137 வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.சென்னையில் கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை:
இதனிடையே,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலர்களை கடந்துள்ளதால்,அதனை சுட்டிக்காட்டி எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்தியுள்ளன.இதனால்,இந்தியாவில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உள்பட மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது.எனினும்,சில்லறை விற்பனையில் பழைய விலையே நீடிக்கிறது.
ரூ.3.5 கோடி இழப்பு:
இத்தகைய விலை உயர்வை சமாளிப்பதற்காக தமிழக அரசு,சில்லறை விலையில் டீசல் வாங்க எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்,தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சில்லறை விற்பனை விலையை விடவும் லிட்டருக்கு 64 காசுகள் குறைவாக டீசல் வழங்க எண்ணெய் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும்,இதனால், தினமும் ரூ.3.5 கோடி இழப்பு தவிர்க்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.