ஆண்டுகள் கடந்தும் நீங்காத சோகம்! சுனாமி 19-ஆம் ஆண்டு நினைவு தினம்!
தமிழகத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு இதே தினத்தில் (டிசம்பர் 26)-ஆம் தேதி சுனாமி அலை ஏற்பட்டது. 2004ஆம் ஆண்டு டிச.26ஆம் தேதி இந்தோனேசியாவின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இந்த சுனாமி அலை ஏற்பட்டது.இந்த சுனாமியால் இந்தியாவில் அதிகம் பேரிழப்பை சந்தித்தது தமிழ்நாடுதான்.
குறிப்பாக இந்த சுனாமி பாதிப்பால் இந்தியாவில் மட்டும் 18,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில், தமிழகத்தில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உலகளவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6,065 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள்.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
இந்த மறக்கமுடியாத நாளை ஆண்டு தோறும் கடலோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் துறைமுகம் சிங்காரத்தோப்பு மேம்பாலத்தில் இருந்து மக்கள் அமைதி ஊர்வலமாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர்.
அதைப்போல, கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், இந்த சுனாமி தாக்கத்தால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாகை, கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கப்பலை ஓரமாக நிறுத்திவைத்துவிட்டு இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.