நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:இன்றே கடைசி நாள்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.இதனால்,அனைத்து பகுதிகளிலும் இன்று மனு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து,முக்கிய கூட்டணி கட்சிகளின் இடப் பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன.அதே சமயம்,இதுவரை 37518 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 27,365 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் காலஅவகாசம் இன்றுமாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.இதனால்,அனைத்து பகுதிகளிலும் இன்று மனு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதன்காரணமாக,போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து,வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறவுள்ளது. இதற்கிடையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரணியாக சென்று வாக்கு சேகரிக்க பிப்ரவரி 11-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பாத யாத்திரை, சைக்கிள் பேரணி, வாகன பேரணிகளுக்கும் வரும் 11-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.