ஜாலிதான்…இந்த மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை!
திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டமானது இன்று (15.03.2022) காலை 8.10 மணியளவில் வடம்பிடித்து தொடங்கி வைக்கப்படுகிறது.96 அடி உயரம், 300 டன் எடையுடன் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் அலங்கரிக்கப்படுகிறது.
இத்தேரோடத்தினையொட்டி துறைவாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி காவல்துறை பொருத்தமட்டில் 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,14 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 47 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நகராட்சி சார்பில் 270 பணியாளர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளனர்.பொது மக்கள் பயன்பாட்டிற்காக 6 இடங்களில் 12 பிரிவுகளாக கழிவறை வசதிகளும், 6 இடங்களில் குடிநீர் குழாய் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது.வருவாய் துறையின் சார்பில் 4 வட்டாட்சியர்களும், 9 வருவாய் துறை பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தீயணைப்புத்துறையினர் தேர் வீதிகளில் வரும்போது தேருக்கு பின்னால், அனைத்து வசதிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய தீயணைப்பு வண்டி, ஒன்றினை தேரினை தொடர்ந்து வர செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையின் சார்பில் 13 உதவி மருத்துவர்கள்,6 சுகாதார ஆய்வாளர், 2 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் அடங்கிய மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,திருவாரூர் மாவட்டத்தில் இன்று திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா நடைபெற உள்ளதால் மாவட்டத்திற்கு இன்று (15.03.2022) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி,அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், மாவட்டத்திலுள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்பட வேண்டும். தேர்த்திருவிழாவில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் விழாவினை சிறப்புற நடத்திட ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்,இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற 09.04.2022 (சனிக்கிழமை) அன்று திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.