அப்பாவி மக்களின் உயிரைக் காக்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

Edapadi palanisamy

டெங்கு போன்ற விஷ காய்ச்சல்களால் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள் என்ற காரணத்தால் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் ” கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளும் பெரியவர்களும் டெங்கு போன்ற விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு படை எடுத்து வருவதாக செய்திகள் வருகின்றன. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, போடி, பாளையங்கோட்டை பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தட்பவெப்ப காலநிலை மாற்றம் காரணமாக இருமல், சளி மற்றும் தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவ்வகை காய்ச்சலுடன் உடல் சோர்வு, உடல் வலி பாதிப்புகளும் இருப்பதால் தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி நோய்களைக் கட்டுப்படுத்த திமுக அரசு முன் வர வேண்டும்.

சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் ஏராளமான ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு படை எடுத்து வருவதாகவும், தமிழ் நாடு மருத்துவப் பணிகள் கழகம், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தேவைப்படும் மருந்து பொருட்களை மொத்தமாக வாங்கித் தராததால், பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் ஏழை, எளிய நோயாளிகளுக்குத் தேவையான ஆன்ட்டிபயாட்டிக் மருந்து மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்து பொருட்கள் முழுமையாக இருப்பதை சுகாதாரத் துறை மந்திரி உறுதிப்படுத்த வலியுறுத்துகிறேன். பரவி வரும் நோய்களின் மூலக்கூறுகளை கண்டறிந்து அவைகளை ஒழிக்கும் பணியை தொய்வில்லாமல் செய்து அப்பாவி மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்