“சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்க…தமிழ்நாடு ஆதி திராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம்” – முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் …!
தமிழ்நாடு ஆதி திராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை,சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி, “கேரளாவின் பட்டணம், ஆந்திராவின் வேங்கி, ஒரிசாவின் பாலூர், கர்நாடகாவின் தலைக்காடு ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுக்கு முயற்சிக்கப்படும்.
தமிழ் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகமெங்கும் பயணம் செய்வோம்.திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது. அங்கு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டுள்ளது”,என்று தெரிவித்தார்.
இந்நிலையில்,மாநில அளவில்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை முதல்வர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.மேலும்,மாநில ஆதிதிராவிடர் நல ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய ஆணையம் ஒன்றை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் இந்த அரசு உருவாக்க சட்டம் இயற்றும். அதற்கான சட்டமுன்வடிவ வரைவு இந்த சட்டமன்ற தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் சட்டப்பேரவையில் நேற்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.