பரவும் நோயாக பசியும் இருந்திருந்தால் நாமும் உணர்ந்திருப்போம் இவர்களின் துயரத்தை.!
கொரோனா வைரஸின் தாக்கம் உலகை அச்சுறுத்தி கொண்டிருக்க, பெரும்பாலான மக்கள் எப்போது முடியும் என எதிர்பார்க்க, இந்த வைரஸ் தொல்லை எப்போது முடியும் என சிலரும், உலகம் தன்னை தானே சுத்தம் செய்கிறது என வெகு சிலரும், இதனை விடுமுறையாய் எண்ணிக்கொண்டு தினமும் புது புதிதாக இணையத்தில் வீடியோ பதிவிட யோசித்து கொண்டிருக்கும் சிலரும் இந்த உலகில் இருக்கின்றனர்.
இதே உலகில், ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி, யாரேனும் நமக்கு உணவு தருவார்களா?! என ஒரு மனித கூட்டம் வீதியில் திரியவும் முடியாமல், தனக்கென ஒரு இடம் இல்லாமல் தவித்து கொண்டிருக்கிறது.
இந்த வைரஸ் நோய் தாக்கி இறந்து விடுவோமோ என உலகமே பயந்து நிற்கும் அதே நேரம் , வயிற்று பசி நோய் தாக்கி இறந்துவிடுவோமோ என ஓர் மனித கூட்டம் கவலை கொள்கிறது.
இந்த மனித கூட்டத்தை கண்டு, தன்னால் முடிந்த உதவிகளை பல நல்ல உள்ளங்கள் செய்து வருகின்றன. களத்தில் இறங்கி உணவு பரிமாற முடியாதவர்கள் தங்களால் முடிந்த பொருளுதவி, பண உதவியும் செய்து வருகின்றனர். இந்த நல்ல உள்ளங்கள் இன்னும் உலகில் நடமாடுவதாலோ என்னவோ இந்த கொளுத்தும் வெயிலிலும் மழை கொட்டுகிறது என தோன்றுகிறது.
அப்படி ஒரு நல்ல உள்ளம் களத்தில் இருந்து பகிர்ந்த தொகுப்பு தான் இது.
‘பாட்டி , இதோ உங்களுக்கு மதிய உணவு என்று கொடுத்த அவனிடம் , “ஐய்யா இப்ப நீ குடுத்துட்ட, இந்த கிழவியால நடக்க முடியாதுப்பா இரவு உணவு தர யாரும் இங்க வரமாட்டங்கபா, இதுலயே இன்னொன்னு தருவியா நா ராத்திரியும் சாப்பிடுறேன்” என்று கூறினால் அந்த கூன் விழுந்த கிழவி’ இந்த சம்பவம் நடைபெற்றது. திருவாரூரில். கிழவிக்கு இருவேளை உணவளித்த அந்த நல்ல உள்ளம் TNTJ அமைப்பு திருவாரூர்.
இந்த TNTJ திருவாரூர் கிளையின் சார்பாக வாரந்தோறும் இயலாதோருக்கு உணவளிக்கும் நிகழ்வு, இல்லாதோருக்கு மாதாந்திர மளிகைப் பொருட்கள் வினியோகிப்பது போன்றவைகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
கடந்த 15 நாட்களாக, நாளோன்றுக்கு 150 உணவு பொட்டலங்கள் வரையில், வீடின்றி தவிக்கும் ஏழைகள், முதியவர்கள், மாற்றுதிறனாளிகள் போன்றவர்களை கண்டறிந்து பாரபட்சம் பாராமல் அவர்களின் இடத்திற்கே சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
இதுவரையில் சுமார் 500 கிலோ அரிசி மற்றும் 80,000 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை பொதுமக்களிடம் திரட்டி வழங்கியுள்ளனர் இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு திருவாரூர் கிளை.
இந்த ஊரடங்கு எப்போது நிறைவு பெரும் என தெரியாத சூழ்நிலையில்,இன்னும் நீட்டிக்கப்படுமோ என அச்சத்தில் இருக்கும் இந்த நிலையில் நம்மால் முடிந்த உதவியை இல்லாதோருக்கும் இயலாதோருக்கும் நம்மிடம் பொருள்/பணம்/உடல் உழைப்பு என இதில் ஏதேனும் ஒன்று இருக்கும் போதே செய்துவிடுவோம்.