தவறான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கேள்விகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?!
டி.என்.பி.எஸ்.சி, பல்வேறு பணிகளுக்காக காலியாக இருந்த 6491 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த குருப்-4 தேர்விற்கு, கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இருந்தும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பலரும் இந்த பணிக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த பணிக்கு சுமார் 16 லட்சத்திற்கும் மேலானோர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று, நடைபெற்ற தேர்வில் 13 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர். மூன்று லட்சம் பேர் தேர்வுக்கு வரவில்லை.
இதில் ஒவ்வொரு வருடமும் வினாத்தாளில் ஏதேனும் ஒரு தவறு இருந்து அது பிறகு சுட்டிக்காட்டப்பட்டு தீர்வுகள் வழங்கப்படும். அதேபோல, தற்போதும் தவறுகள் இருந்துள்ளன. வினாத்தாளில் தமிழ் ஆங்கிலம் என ஒரு கேள்வி இரண்டு மொழிகளிலும் கேட்கப்பட்டிருக்கும். அதில், ஒன்றில் மக்களவை கலைக்கப்பட்ட நாள் என ஒரு பொருத்துக கேள்வி இருந்தது. அதற்கு கீழே தமிழில் மக்களவைத் என்பதற்கு பதிலாக குடியரசு தினம் என தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. மேலும், குடியரசு தினமான ஜனவரி 26 என்ற பதில் விருப்பங்களில் கொடுக்கப்படவில்லை. அதேபோல, இந்திய அரசியலமைப்பு பற்றிய ஒரு கேள்வியும் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. இதேபோல் மொத்தம் ஐந்து கேள்விகள் தவறாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆதலால், இது குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இன்னும் ஒரு வாரத்தில் இந்த கேள்விகளுக்கான விடைகள் TNPSC வெளியிடப்படும். அப்போது தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிப்பார்கள். இந்த ஆட்சேபனைகள் டிஎன்பிஎஸ்சி கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டு தீர்வுகள் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால் தேர்வர்கள் விடை வெளியாகும் வரை காத்திருந்து ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.