டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!
தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார் என அமைச்சர் விளக்கம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் குறிப்பிட்ட சென்டர்களில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்வாகியுள்ளதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எழுந்த புகார் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் விளக்கமளித்தார்.
அமைச்சர் கூறுகையில், தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். பயிற்சி மையத்தை நடத்தும் ஒருவர் தான் தனது மையத்தில் பயின்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்துள்ளார்.
தட்டச்சர் பணிக்கான தேர்வு எழுதியவர்களில் தொழில்நுட்ப தகுதி அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் இதுபோன்ற தேர்ச்சி உள்ளதா என ஒப்பிட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள 8 மையங்களில் நடந்த தேர்வில் முதல் 10,000 இடங்களில் 300 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள கடந்த ஆண்டே குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது. 7,000 காலி பணியிடங்களுக்கு சுமார் 24 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 24 லட்சம் எழுதுவதற்காக 100 கோடி தாள்களை அச்சிட வேண்டியிருந்தது.
தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த இன்றைய நாளில் ஒவ்வொரு ஆண்டும் 24 லட்சம் பேரை தேர்வு எழுத வைப்பது நியாயமல்ல, 24 லட்சம் பேர் விண்ணப்பித்ததால் தேர்வுக்காக கூடுதலாக ரூ.42 கோடி செலவிடப்பட்டது. டிஎன்பிஎஸ்சி சீர்திருத்தத்துக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். டிஎன்பிஎஸ்சி சீர்திருத்தம் மூலமே இதுபோன்ற குளறுபடிகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.