யூ-டியூப் சேனலை எவ்வாறு உருவாக்குவது.? தமிழக அரசின் சிறப்பு பயிற்சி அறிவிப்பு.!
சென்னை: தமிழகத்தில் உள்ள தொழில்முனைவோர் இணையத்தின் வாயிலாக தங்கள் வணிகத்தை மேம்படுத்தவும், தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தவும் உள்ள வழிமுறைகள் பற்றி தமிழக அரசு பயிற்சி அளிக்க உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள இணையதளத்தில் முன்னதாக விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கான அறிவிப்பை தமிழக செய்தி தொடர்பு கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஜூலை 24ஆம் தேதி வரையில் மூன்று நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. 3 நாட்களும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த 3 நாட்கள் பயிற்சியில் தொழில்முனைவோர் எவ்வாறு யூடியூப் சேனலை உருவாக்குவது, அவர்கள் பொருட்களை/வணிகத்தை எவ்வாறு சந்தைப்படுத்துவது தொடர்பாக நேரடி பயிற்சி வகுப்பு அளிக்கப்படும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறைந்தப்பட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.
இப்பயிற்சி பற்றிய விவரங்களை அறிய, பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.editn.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்துக் கொள்ளலாம். மேலும், அலுவலக வேலை நாட்களில் நேரில் வந்தும் தெரிந்து கொள்ளலாம். இந்த பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்
இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கி பயிற்சி பெற எதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் அதற்கும் விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன முகவரி :
சிட்கோ தொழிற்பேட்டை,
இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை,
ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை -600 032.
044-22252081/22252082/8668100181/9841336033.