நாங்க அதற்கு காரணமில்லை.! மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில்.!
சென்னை: மத்திய பட்ஜெட் 2024 தாக்கல் செய்யப்பட்டதற்கு பின்பு, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , பட்ஜெட்டில் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் பற்றி செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது தமிழகத்திற்கு 6,362 கோடி ரூபாய் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் இல்லை. தமிழக (திமுக) அரசு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் செய்கிறது என கூறி குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தனது விளக்கத்தை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எவ்வித காலதாமதமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அறிக்கையில் கூறுகையில், கடந்த 2021 மே மாதம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் 2,443 ஹெக்டேர் நிலங்கள் கைகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி – மதுரை (வழி:அருப்புக்கோட்டை) வழியாக புதிய அகலப்பாதை திட்டத்திற்கு 937 ஹெக்டேர் நிலங்களும், திருவண்ணாமலை – திண்டிவனம் புதிய அகலப்பாதை திட்டதற்கு 276 ஹெக்டேர் நிலங்களும், ஈரோடு சரக்கு முனையம் அமைக்க 13 ஹெக்டேர் நிலங்களும் என மொத்தம் 1226 ஹெக்டேர் நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் இதற்கு மத்திய அரசு 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அனுமதி வழங்கப்படாததால் அப்பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன.
இதனைத் தவிர 1,216 ஹெக்டேர் நிலங்களில் 74 சதவீதம் அதாவது 907.33 ஹெக்டேர் நிலங்கள் கையகடுத்தப்பட்டு ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே திட்டங்களை செயல்படுத்த எந்தவித தடைகளும் இன்றி அவ்வபோது அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையிலான புதிய ரயில் தடம் அமைக்கும் திட்டத்திற்கு முதலில் 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் சுற்றுசூழல் குழுவின் அறிக்கையின்படி, ரயில்வே தடம் அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை நிறுத்துமாறு தமிழக முதலமைச்சர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதாலே அந்தத் திட்டம் கைவிட பரிந்துரை செய்யப்பட்டது.
இதை தவிர தமிழக ரயில்வே ரயில்வே பணிகளுக்கு அவ்வப்போது தலைமைச் செயலாளர் தலைமையில், மாவட்ட ஆட்சியர்களுடன், ரயில்வே பணிகள் குறித்து ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ரயில்வே திட்டங்கள் பொருத்தவரையில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி உரிய காலத்திற்குள் அவற்றை முடிக்க செயலாற்றி வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எவ்வித காலதாமதமும் இல்லை – மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களின் பதிலறிக்கை#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@AshwiniVaishnaw @KKSSRR_DMK pic.twitter.com/ZEAXbeSjqo
— TN DIPR (@TNDIPRNEWS) July 25, 2024