இந்து அறநிலையத்துறையா.? வசூல் ராஜாவா.? உயர்நீதிமன்றம் காட்டம்.!
தமிழ்நாடு அறநிலையத்துறை மாநிலத்தில் உள்ள கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை என்று மதுரை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை : ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் குருக்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையினரால் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது என சென்னை வழக்கறிஞர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கெளரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.
ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் 12 குருக்கள் மற்றும் 19 உதவி குருக்கள் பணிகள் உள்ளன. அதில், 2 குருக்கள் மற்றும் 7 உதவி குருக்கள் மட்டுமே பணியில் உள்ளனர் மீதமுள்ள குருக்கள், உதவி குருக்கள் என மொத்தம் 42 காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை என்றும், இந்த கோயிலுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வருமானம் வருகிறது. ஆனால், உரிய பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என்றும் வழக்கில் குறிப்பிப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையில் நீதிபதி அமர்வு, தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையினர் மீது கடும் அதிருப்தியை பதிவு செய்தது. அறநிலையத்துறையினர் முறையாக கோயில்களை பராமரிப்பதில்லை. மாறாக வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போல வசூலை மட்டும் செய்கின்றனர் என நீதிபதிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
பின்னர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் எத்தனை பணியிடங்கள் உள்ளன, அதில் எத்தனை நிரப்பப்பட்டுள்ளன, மீதம் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, கோயிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு, கோயில் பராமரிப்பு செலவு போக மீதம் உள்ள பணம் என்னவாகிறது என்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் அறிக்கை தர வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 14க்கு உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.