விடுதி காப்பாளர்களுக்கு 3 நாட்கள் புத்தாக்கப் பயிற்சி – அரசாணை வெளியீடு!
சிறுபான்மையினர் நல விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள், காப்பாளினிகளுக்கு மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள்/ காப்பாளினிகளுக்கு 3 நாட்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்க நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக,அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:”2021-2022 ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர் ,மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.
“விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்/காப்பாளினிகள் தங்கள் விடுதியை சிறந்த முறையில் பராமரிப்பு செய்திடவும், விடுதியை திறம்பட நடத்திடவும் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்/ காப்பாளினிகளுக்கு புத்தாக்க பயிற்சி 83 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.
அதன்படி,பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப் பட்டோர் (மற்றும்) சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளில் பணியாற்றி வரும் 965 காப்பாளர்/ காப்பாளினிகளுக்கு சென்னை,கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அண்ணா நிர்வாக பணியான கல்லூரியில் பயிற்சி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.