உள்ளாட்சித் தேர்தல் உயிரிழப்புகள்.. இழப்பீட்டு தொகையை அதிகரித்த தமிழக அரசு.!
சென்னை: தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி தேர்தல் என்பது நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வருட இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆலோசனை கூட்டத்தை முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் மேற்கொண்டார். இந்த தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தி முடிக்கும்.
தற்போது தேர்தல் தொடர்பான ஓர் இழப்பீட்டு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இழப்பீட்டு தொகையை அரசு அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டுவெடிப்பு, சமூக விரோத தாக்குதல் போன்ற காரணங்களால் உயிரிழக்கும் தேர்தல் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை 10 லட்ச ரூபாயில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும்,
தேர்தல் சமயத்தில் வேறு உடல்நல காரணங்களால் உயிரிழக்கும் தேர்தல் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை 5 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்,
அடுத்து, தேர்தல் சமயத்தில் நிரந்தர உடல்நல பாதிப்பு ஏற்படும் தேர்தல் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை 2.5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு சிறு காயம் ஏற்பட்டால் வழங்கப்படும் இழப்பீடு தொகை 10 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.