பாராட்டிய பொருளாதார ஆலோசகர் – உறுதியளித்த முதல்வர்!

Default Image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (29.3.2022) முகாம் அலுவலகத்தில்,முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எஸ்தர் டப்லோ அவர்கள் சந்தித்துப் பேசினார்.

பாராட்டிய எஸ்தர் டப்லோ:

இந்த சந்திப்பின்போது,பேராசிரியர் எஸ்தர் டப்லோ அவர்கள்,கொள்கை முடிவுகளுக்கும்,அரசு முதலீடுகளுக்கும் தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு அரசின் நிலையான உறுதிப்பாட்டை பாராட்டினார்.

மேலும், மாநிலத்தில் உள்ள நலிந்த பிரிவினருக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தைச் சீர்திருத்துவதற்கான பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு, முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும்,கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தையும் உயர்த்தியமைக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.

முதியோர்களுக்கு வலுவான பாதுகாப்பு:

மக்கள்தொகையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு, குறிப்பாக தனியாக வாழும் முதியோர்களுக்கு வலுவான பாதுகாப்பு வலையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அடுத்த எட்டு ஆண்டுகளில்:

மக்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டமானது,அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கைத் தரம் என்ற அரசின் குறிக்கோளுக்கு ஒரு முன்னோடி முயற்சி என்று பாராட்டினார். மாநிலத்தில் ஏழைகள் மற்றும் முதியவர்கள் எதிர்கொள்ளும் பெரும் சவால்களை வெளிக்கொணர அடுத்த எட்டு ஆண்டுகளில் தொடர்ச்சியான ஆய்வுகள் நடத்தப்படும் என்றும், இப்பிரச்சனைகளுக்கான கொள்கை தீர்வுகளை உருவாக்க இது பயன்படும் எனக் குறிப்பிட்டார்.

முதல்வர் உறுதி:

இதனையடுத்து,தரவுகள் அடிப்படையில் கொள்கைகளை வகுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கும், மாநிலத்தின் சமூக பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும்,தமிழ்நாடு அரசு எப்போதும் தனது முழு ஆதரவை நல்கும் என முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.

இச்சந்திப்பின்போது,தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்