ஃபெஞ்சல் புயல் நிவாரணம் : ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம், உயிரிழந்தோருக்கு ரூ.5 லட்சம் அறிவிப்பு!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி உதவிகளை அறிவித்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை : ஃபெஞ்சல் புயல் கனமழையால் வடதமிழக மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி என பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் மக்கள் பகுதிகளிக்குள் புகுந்துள்ளது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் கனமழை பாதிப்பு குறித்தும், மீட்பு பணிகள் மற்றும் நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சி.வி.கணேசன், உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்தார். அதன்படி,
- விழுப்புரம் , கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மேல் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும்.
- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
- சேதமடைந்த குடிசைகளுக்கு அதனை சீரமைக்க ரூ.10,000மும், முழுவதுமாக சேதமடைந்த குடிசைகளை சீரமைக்க கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது
- 33% அல்லது அதற்கும் மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் நிவாரணமும், 33% அல்லது அதற்கும் மேல் பாதிக்கப்பட்ட பல்லாண்டு பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.22,500 நிவாரணம் வழங்கப்படும்.
- எருது, பசு உள்ளிட்ட கால்நடை உயிரிழப்புகளுக்கு இழப்பீடு தொகையாக ரூ.37,500 நிவாரணமும், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புகளுக்கு நிவாரண தொகையாக ரூ.4,000மும், கோழி உயிரிழப்புக்கு ரூ.100ம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஃபெஞ்சல் புயலால் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முக்கிய சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும்.
- பாடப்புத்தகங்களை இழந்துள்ள மாணவ மாணவிகளுக்கு இலவச புதிய பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.