ரூ.1500 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை சட்டசபையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில்,
தலைநகர் சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள்:
- சென்னை எல்லைச் சாலையின் நான்காம் பகுதியான ஸ்ரீ பெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை உள்ள பகுதியில் வாகன சுரங்கப்பாதைகள், சாலை சந்திப்பு மேம்பாடு, சாலை பாதுகாப்பு ஆகிய பணிகள் உலக தரத்துடன் ரூ.531 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
- சிறுசேரி முதல் மகாபலிபுரம் வரையுள்ள 14.8 கி.மீ நீளச்சாலை, சேவை சாலைகளுடன் கூடிய 6 வழிச்சாலையாக ரூ.350 கோடியில் மேம்படுத்தப்படும்.
- சென்னை மாவட்டத்தில் 5 சாலைகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 3 சாலைகளிலும் புதிய வடிகால் மற்றும் சிறுபாலங்கள் ரூ.277 கோடி மதிப்பில் கட்டப்படும்.
- சென்னை வெளிவட்ட சாலை உடன் இணையும் 12 சாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, முதற்கட்டமாக நிலத்தொகுப்பு என்ற புதிய அணுகு முறையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- சென்னை மாநகரின் மூன்று பிரதான சாலைகளை சீர்மிகு சாலைகளாக அமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை ரூ.9.10 கோடி மதிப்பில் மற்றும் அண்ணா சாலையில் முத்துசாமி பாலம் முதல் தாம்பரம் வரை மற்றும் தாம்பரம் முதல் ஸ்ரீ பெரும்புதூர் வரை மாற்று வழி அமைக்க ரூ.38 லட்சம் மதிப்பில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
- மேலும், வண்டலூர் சந்திப்பில் பாதசாரிகளுக்கான மேம்பாலம் ரூ.16.17 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.
- சென்னை தகவல் தொழில்நுட்ப சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு தரமணி முதல் சிறுசேரி வரையிலான பிரதான சாலை சந்திப்புகளான தரமணி சாலை சந்திப்பு, பெருங்குடி எம்ஜிஆர் சாலை சந்திப்பு, துரைப்பாக்கம் சாலை சந்திப்பு, சோழிங்கநல்லூர் சாலைசந்திப்பு, சிறுசேரி சாலை சந்திப்பு ஆகிய 5 இடங்களில் ரூ.500 கோடியில் மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
பிற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்:
- ஓசூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை இணைக்கும் 158 கி.மீ நீளச்சாலைகளில் ரூ.361 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
- ஆர்.கே.பேட்டை, பள்ளிகொண்டா, மணச்சநல்லூர் (பகுதி II) மற்றும் மணப்பாறை, திருத்துறைப்பூண்டி (பகுதி II) மற்றும் நன்னிலம், ஏழாயிரம்பண்ணை-குகன்பாறை, அரியலூர் (பகுதி II), போடி ஆகிய 9 இடங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்க ரூ.2.40 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
- மதுரையில் ஜெயவிலாஸ் சந்திப்பு முதல் பெரியார் சிலை வரை, திருச்சியில் அண்ணா சிலை முதல் திருச்சி ரயில்வே சந்திப்பு வரை,
- கோவையில் வெள்ளலூர் பேருந்து நிலையம் முதல் எல்&டி புறவழிச்சாலை வரை உயர் மட்ட சாலை மேம்பாலம் அமைக்க மற்றும் மதுரையில் புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லும் 5 சாலைகளை மேம்பாடு செய்ய மற்றும்
- தேனி மாவட்டத்தில் அகமலை சாலையைமேம்பாடு செய்ய விரிவான திட்ட அறிக்கை ரூ.3.25 கோடியில் தயாரிக்கப்படும்.
ஜலகண்டபுரம் புறவழிச்சாலை அமைக்க ரூ.15 கோடி மதிப்பில் நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். - திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோவை, ஈரோடு, சேலம், சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் 20 ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை ரூ.7.44 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும்.
- 12 ஆற்றுப்பாலங்கள் 9 மாவட்டங்களில் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை ரூ.5.19 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும்.
- நெடுஞ்சாலை துறைக்கான 11 அலுவலக கட்டிடங்கள் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்படும்.
- 12 மாநகராட்சி பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளை துப்புரவு செய்ய 20 துப்புரவு இயந்திரங்கள் ரூ.16 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.
- 18 மாவட்டங்களில் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 54 ஆற்றுப்பாலங்கள் ரூ.310 கோடி மதிப்பில் கட்டப்படும்.
- சாலை பாதுகாப்புப் பணிகள் ரூ.400 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
- பாம்பன் கால்வாயை சிறிய மற்றும் நடுத்தர கப்பல் போக்குவரத்துக்காக சுமார் 10 மீட்டர் ஆழத்திற்கு தூர்வாருவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை ரூ.1 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும்.
உலக வங்கியின் கூடுதல் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள்:
- ஓமலூர்-மேச்சேரி சாலை,
- மல்லியக்கரை-ஆத்தூர் சாலை,
- சித்தோடு-ஈரோடு சாலை,
- காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் செய்யாறு சிறப்பு பொருளாதார மண்டலம் வரை,
- ஈரோடு-சென்னிமலை சாலை,
- அரியலூர்-ரெட்டிபாளையம் சாலை,
- ஆற்காடு-ஆரணி சாலை ஆகிய 109 கி.மீ நீள 7 சாலைகள் ரூ.1500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும்.