தொழிலாளர்கள் போராட்டத்தில் இல்லை.. தலைவர்கள் தான் போராட்டத்தில் உள்ளனர்.! – அமைச்சர் சிவசங்கர்.
தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நல சங்களான சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்தவர்கள், வரவு செலவு பற்றாக்குறை விவரங்கள், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வுஊதிய திட்டத்தை செயல்படுத்துவது, 15வது ஊதிய ஒப்பந்த கொள்கை நிறைவேற்றம். வாரிசுக்கு வேலை, ஓய்வூதியர்களின் நிலுவை தொகை, பஞ்சபடி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்து அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஆனால் ஜனவரி 3 மற்றும் நேற்று (ஜனவரி 8) ஆகிய தேதிகளில் அரசு அதிகாரிகள், அமைச்சருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து இன்று (ஜனவரி 9) முதல் தமிழகத்தில் மேற்கண்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியிருந்தனர்.
தொடங்கியது போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்… அவதியில் பொதுமக்கள்!
ஆனால் பொதுமக்கள் நலன் கருதி, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள், தற்காலிக பணியாளர்களை கொண்டு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், பொதுமக்களுக்கு இடையூறின்றி பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
மேலும் , போராட்டத்தை அறிவித்த தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களே பணிக்கு திரும்பிவிட்டனர். அந்த சங்கத்தின் தலைவர்கள் தான் போராட்டத்தை அறிவித்துவிட்டோம் என கைவிட முடியாமல் தவிக்கின்றனர். இந்த போராட்டம் என்பது படுதோல்வி இல்லை. இந்த கூட்டமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் மக்களின் சூழ்நிலை உணர்ந்து செயல்பட்டு வருகின்றனர். தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கள் அமைப்பின் பலம் காட்டுவதற்காக போராட்டத்தை அறிவித்தனர். தொழிற்சங்களை சேர்ந்தவர்களுடன் எந்த நேரத்திலும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.
கடந்த 96 மாதங்களாக அகவிலைப்படி நிறுத்திவிட்டனர் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அப்படி பார்த்தால் அதிமுக ஆட்சியிலே போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. தற்போது அகவிலைப்படி உயர்த்தமுடியாத அளவுக்கு நிதிச்சூழல் உருவாகியுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் எப்போதும் மக்கள் நலன் கருதி தன்னலமின்றி சேவையாற்றுவார்கள். குடும்ப சூழ்நிலை, பண்டிகை தினம் என எதனையும் கருத்தில் கொள்ளாமல தினமும் பேருந்தை இயக்கி வருகின்றனர். அதன் காரணமாக தான் தினமும் சராசரியாக 1.78 கோடி பேர் பயணம் செய்யும் சூழல் தமிழகத்தில் உள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதல் தேதியில் சம்பளம் என்பது தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் தான் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.