TNBudget 2025 : 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்!
அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என தமிழக பட்ஜெட் 2025-ல் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு பட்ஜெட் 2025 – 2026-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மகளிருக்கான சிறப்பு அறிவிப்புகள், புதிய கல்லூரிகள், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. மும்மொழிக்கொள்கையை தமிழக அரசு ஏற்காத காரணத்தால் மத்திய அரசு வழங்க மறுத்த ரூ.2150 கோடியை மாநில அரசே வழங்கும் என்றும், ரூ.65 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு வகுப்பறைகள், நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.
அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கப்படும். இதற்காக ரூ.50 கோடி மதிப்பீட்டில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின.
இதில் முக்கிய அறிவிப்பாக, அடுத்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 20 லட்சம் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் விருப்பத்தின் பெயரில் மடிக்கணினி (லேப்டாப்) அல்லது கைக்கணினி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.