பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் மற்றும் விநியோகம் பற்றி பாஜக முன்வைத்த குற்றச்சாட்டுக்கு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் க்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல் இருந்த துவரம் பருப்பு கடந்த 3 மாதங்களாக பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை என்றும், வெளிச்சந்தையில் ரூ.200க்கு துவரம் பருப்பு விற்கப்படுவதால், ரேஷன் கடைகளில் ரூ.30க்கு கிடைக்கும் துவரம் பருப்பையே பலரும் நம்பி உள்ளனர் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டி இருந்தார்.
இதனை தொடர்ந்து பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் , துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை போதிய இருப்பு இல்லை . துவரம் பருப்பு கொள்முதலில் 100.கோடி வரையில் ஊழல் நடைபெற்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் ரேஷன் கடை எண் CB 047-இல் கூட துவரம் பருப்பு இருப்பு இல்லை என குற்றம் சட்டி இருந்தார்.
இதனை குறிப்பிட்டு தற்போது தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” ரேஷன் கடைகளில் தரமான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வெளிப்படைத் தன்மையுடன் கொள்முதல் செய்யப்படுகிறது. பாஜக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டது ஆதாரமற்றக் குற்றச்சாட்டைத் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். வெளிச்சந்தையில் பருப்பு விலை என்ன என்பதைக் கூட அறியாமல் குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஒரு கடையில் (02CB047NC அன்பழகன் நகர் – 2) பருப்பு இல்லை என்று இன்னொரு குற்றச்சாட்டையும் ஆதாரமில்லாமல் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட கடையில் 1319 குடும்ப அட்டைகள் உள்ளன. அந்தக் கடைக்கு அக்டோபர் 24 மாதத்திற்கு ஏற்கனவே இருப்பில் இருந்த 53 கிலோவுடன் 1119 கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு 800 கிலோ துவரம் பருப்பு நகர்வு செய்யப்பட்டு இதுவரை 605 கிலோ விநியோகம் செய்யப்பட்டு 248 கிலோ இருப்பு உள்ளது.” எனக் குறிப்பிட்டு ரேஷன் கடைகளுக்கு துவரம்பருப்பு , பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவது தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டது.
மேலும், “எந்தவித ஆதாரமும் இல்லாமல் 100 கோடி ரூபாய் இழப்பு மற்றும் ஊழல் என்று கூறுவது முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பானது. அதே போல் குறிப்பிட்ட ஒரு கடையில் பருப்பு இல்லை என்று கூறியிருப்பதும் அவரது அறியாமையைக் காட்டுகிறது. ஆதலால் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் அவர்கள் தன்னுடைய ஆதாரமற்ற குற்றச்சாட்டைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுட்டுள்ளது.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் அறிக்கை.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @r_sakkarapani pic.twitter.com/rCODmNc8mk
— TN DIPR (@TNDIPRNEWS) October 18, 2024