தனியார் பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா?

Default Image

உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அமர்வுக்கு அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா? என்பது குறித்த விசாரணைக்கு  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு, 2015 – 16 முதல் மூன்று ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை செங்குன்றம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பள்ளிகள் தொடர்ந்த இந்த வழக்குகள் நீதிபதி சி.டி.செல்வம், நீதிபதி எம்.வி.முரளீதரன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆசிரியர்களின் ஊதியத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்ட குழு, ஆசிரியர்களுக்கான சேமநல நிதி பங்களிப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ஆகும் செலவு உள்ளிட்ட செலவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்து விட்டதாக பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தபட்ச ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என குழு தெரிவித்துள்ளதாகவும் தனியார் பள்ளிகள் தரப்பில் வாதிடப்பட்டது. கல்வித் தரத்தை பேணுவதற்காக பள்ளிகள் தங்கள் விருப்பம் போல ஆசிரியர்களை நியமிக்க உரிமை உள்ளது என்றும், குறைந்தபட்ச ஆசிரியர்கள் குறித்து தெரிவித்துள்ள கல்வி உரிமைச் சட்டத்தில் அதிகபட்சமாக எத்தனை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனத் தெரிவிக்கவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

எனவே, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா? என்பது குறித்து மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஆய்வு செய்ய, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர். மேலும், அப்பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவுகளையும் நீதிபதிகள் ரத்து செய்தனர். இதுசம்பந்தமாக பரிசீலித்து சட்டப்படி தகுந்த முடிவை எடுப்பதற்காக இந்த விவகாரத்தை மீண்டும் கட்டண நிர்ணயக் குழுவுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்