திருவண்ணாமலை மண்சரிவு துயரம்! தற்போது வரை நிலவரம்…

திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில் அதில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 2 குழந்தைகளின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

tiruvannamalai landslide (1)

திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழக வடமாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. திருவண்ணாமலையிலும் கனமழை பேய்தது. அப்போது கடந்த ஞாயிற்று கிழமையன்று மலையடிவாரத்தில் வ.உ.சி நகர் பகுதியில் மாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

அப்போது, ராஜ்குமார் – மீனா தம்பதி தங்கள் வீட்டினுள் இருந்துள்ளனர். வீதியில் விளையாடி கொண்டிருந்த, அவர்களின் மகன் கவுதம் (9), மகள் இனியா (7) மற்றும் பக்கத்துவீட்டு உறவினர்களின் மகள்கள் மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகியோர் வீட்ற்குள் ஓடியுள்ளனர். அந்த சமயம் துரதிஷ்டவசமாக ஒரு பெரிய பாறை வீட்டின் மீது விழுந்ததில், வீடு மண்ணில் புதையுண்டது.

7 பேர் மண்ணுக்கு அடியில் புதைந்த தகவல் அறிந்த மாநில மீட்புப்படையினர், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஞாயிற்றுக்கிழமை கனமழை தொடர்ந்ததால் மீட்புப்பணிகளில் மீட்புப்படை வீரர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

அதனை  தொடர்ந்து நேற்று (டிசம்பர் 2) தேசிய மீட்புப்படையினர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை தொடர்ந்தனர். சுமார் 170 பேர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர் . அவர்க அனைவரும் உயிருடன் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு நேற்று செய்தியாளர்களிடம் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ஆனால், நேற்று மாலை முதலே, மண்சரிவில் சிக்கிய 7 பேரும் ஒவ்வொரு நபராக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தற்போது வரையில் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் உடல்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 2 குழந்தைகளின் உடல்கள் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மண்சரிவு ஏற்பட்ட பகுதி குறுகிய பகுதியாக இருந்ததால், இயந்திரங்களை கொண்டு செல்வதில் சிரமங்கள் இருந்த நிலையில், இன்று அருகில் உள்ள சில பகுதிகளை இடித்து தற்போது சிறிய ரக இயந்திரங்களை கொண்டு சென்று மீட்பு பணிகளை வீரர்கள் துரிதப்படுத்தியுள்ளனர். விரைவில் 2 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்