திருவண்ணாமலை மண்சரிவு துயரம் : 7 பேரின் உடல்களும் மீட்பு!
திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கிய 7 பேரில் 5 பேர் உடல் மீட்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீதம் உள்ள 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக திருவண்ணாமலையில் பெய்த கனமழையால், (டிசம்பர் 1) மலையடிவார பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வஉசி நகரில் ராஜ்குமார் – மீனா தம்பதி வீட்டின் மீது பாறை விழுந்ததில் அந்த வீடு மண்ணில் புதையுண்டது.
அந்த வீட்டினுள், தம்பதியின் மகன் கவுதம் (9), மகள் இனியா (7) மற்றும் பக்கத்துவீட்டாரின் மகள்கள் மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகியோரும் மண்ணில் புதையுண்ட வீட்டினுள் இருந்துள்ளனர். 2 நாட்களாக நடைபெற்ற மீட்பு பணியில் நேற்று வரை 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 2 குழந்தைகளின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இவர்களை தேடும் பணியில் மாநில மீட்பு படையினர் மற்றும் தேசிய மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்றும் தொடர்ந்த மீட்பு பணியில் முதலில் 6வது உடலும் மீட்கப்பட்ட நிலையில் தற்போது 7வது உடலும் கைப்பற்றப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.