தீபத்திருவிழாவில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்!
திருவண்ணாமலையில் இன்றும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஆய்வு அறிக்கையின் படி மக்கள் அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்மையில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று திருவண்ணாமலையின் தீப மலை அடிவாரத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 குழந்தைகள் உட்பட 7பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து திருவண்ணாமலை தீப திருவிழா இந்த வருடம் வழக்கம் போல நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வரும் சூழலில், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வழக்கம் போல திருக்கார்த்திகை தீப திருவிழாவுக்கான கொடியேற்றம் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கோலாகலமாக தொடங்கி தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. தீப திருவிழாவானது டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது 2263 அடி உயரம் கொண்ட தீப மலையில் கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மலையேற்ற அனுமதி அளிக்கப்படும்.
ஆனால், இந்த முறை நிலச்சரிவு ஏற்பட்ட காரணத்தால் தீப திருவிழாவின் போது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், “நேற்று நானும், அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் நில ஆராய்ச்சி ஆய்வாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினோம். சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு நேற்று ஆய்வு நடத்தினர். கொப்பரை தேங்காய் ஏற்றும் இடத்தில் இன்றும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
அங்கு நேற்று கூட நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆய்வு நடத்தப்பட்ட அந்த ஆய்வறிக்கையின் படி தான், வழக்கமாக அனுமதிக்கப்படுவது போல மக்களை அனுமதிக்கலாமா? அல்லது குறைவானவர்களுக்கு அனுமதி அளிக்கலாமா என்பது பற்றி முடிவு செய்வோம்.
டிசம்பர் 13ஆம் தேதி திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீப ஒளியை மக்கள் அனைவரும் பார்க்கும் படி ஏற்பாடு செய்யப்படும்.” அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.