லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!
லட்டு விவகாரம் குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. எனக் கூறி பவன் கல்யானிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் கார்த்தி.
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தின் புரொமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ‘சத்யம் சுந்தரம்’ எனும் பெயரில் ரிலீசாக உள்ளது.
தெலுங்கில் ரிலீசாக உள்ளதால், ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்வில் நடிகர் கார்த்தி , இயக்குனர் பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அங்குள்ள தொகுப்பாளர், லட்டு சாப்பிடுறீங்களா என கேட்டார். உடனே நடிகர் கார்த்தி சிரித்துக்கொண்டே, “எனக்கு லட்டு வேண்டாம். லட்டு குறித்து இப்போது பேசக் கூடாது. அது இப்போது சென்சிட்டிவ் விவகாரம். லட்டு வேண்டாம். ” என பேசியிருந்தார்.
இதனை குறிப்பிட்டு, ஆந்திரா துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் செய்தியாளர்களிடம் பேசுகையில், “லட்டு விவகாரத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார்கள். சமீபத்திய சினிமா நிகழ்ச்சியில் கூட அதனை விமர்சனம் செய்தார்கள். இந்த விவகாரத்தை நகைச்சுவையாக எடுத்து பேசாதீர்கள். உங்களை நான் நடிகர்களாக மதிக்கிறேன். சனாதானத்தை பற்றி பேசுகையில் 100 தடவை யோசித்து பேச வேண்டும்.” என பேசியிருந்தார்.
இதனை அடுத்து தற்போது நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கதில், பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் . இது தொடர்பாக அவர் பதிவிட்டதில், ” அன்புள்ள பவன் கல்யாண் சார், உங்கள் மீது ஆழ்ந்த மரியாதை வைத்துள்ளேன். அந்த சினிமா நிகழ்வில் நேர்ந்த தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திருப்பதி வெங்கடேஷப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை மதிக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
அண்மையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்து, அதனை மாநில ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. இந்த விவகாரம் ஆந்திராவை தாண்டி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள்ளது. கோயில் பிரசாதத்தில் இவ்வாறான சம்பவம் நடைபெற்றதற்காக நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் தற்போது விரதமிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dear @PawanKalyan sir, with deep respects to you, I apologize for any unintended misunderstanding caused. As a humble devotee of Lord Venkateswara, I always hold our traditions dear. Best regards.
— Karthi (@Karthi_Offl) September 24, 2024