திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!
திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புக் குழு ஆய்வு செய்து வருகிறது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், பன்றி கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்திருந்ததாக உணவுப்பொருள் ஆய்வுக்குழு கூறி முதலமைச்சரின் குற்றசாட்டை உறுதிப்படுத்தியது.
திருப்பதி கோயில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்ததாக கூறப்பட்ட விவகாரம் நாடு முழுக்க பேசு பொருளாக மாறியது. மேலும், நேற்று திருப்பதி தேவஸ்தானம் அளித்த விளக்கத்தில், கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாடு, திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்திடம் இருந்து தான் நெய் வந்ததாகவும், அந்த நெய்யின் தரம் 20 சதவீதம் மட்டுமே இருந்ததாகவும் குற்றம் சாட்டியது.
இந்த குற்றச்சாட்டுக்கு ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. மேலும், நாங்கள் தரத்தை உறுதி செய்த பிறகே திருப்பதிக்கு நெய் விநியோகம் செய்தோம் என்றும், உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் எங்கள் நிறுவனத்திற்கு வந்து சோதனை செய்து கொள்ளலாம் என்றும் கூறியிருந்தனர்.
இப்படியான சூழலில், இன்று மத்திய உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய குழு திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர் நிறுவனத்திற்கு வந்து , அங்கு தயாரிக்கப்படும் நெய் மற்றும் பால் பொருட்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. இதனை சென்னையில் உள்ள ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைத்து, அங்கு இந்த பொருட்கள் சோதனை செய்யப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நேற்று மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏ.ஆர் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.