பாகன் இறந்த இடத்தை சுற்றி வந்த கோயில் யானை? சோக நிகழ்வின் பின்னணி என்ன?
திருச்செந்தூர் முருகன் கோயில் யானை மிதித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவ இடத்தில் மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கோயில் யானை தெய்வானை மிதித்ததில் யானை பாகன் மற்றும் பாகனின் உறவினர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
25 வயதுடைய தெய்வானை எனும் பெண் யானை திருச்செந்தூர் முருகன் கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த யானையை பராமரிக்கும் பொறுப்பை பாகன் உதயகுமார் என்பவர் மேற்கொண்டு வந்துள்ளார். இவரது உறவினர் சிசுபாலன் என்பவர் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்துள்ளார்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யானை அருகில் இருந்த சிசுபாலனை கோயில் யானை தெய்வானை மிதித்துள்ளது. இதனை கண்ட பாகன் உதயகுமார் சிசுபாலனை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், பாகன் உதயகுமாரையும் கோயில் யானை தாக்கியுள்ளது. இதில் இருவரும் படுகாயமுற்றனர். யானை தாக்கியதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். பாகன் உதயகுமார் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து கோயிலில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட வன அலுவலர் கூறுகையில், பொதுவாக ஆண் யானைகளுக்கு தான் மதம் பிடிக்கும். பெண் யானைகளுக்கு மதம் பிடிக்க வாய்ப்பில்லை. விலங்குகளின் மனநிலையை அறிய முடியாத சமயம் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. தெய்வானை யானையால் இதுவரை எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை.
கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. தற்போது யானை அமைதியாக உள்ளது. கால்நடை மருத்துவ குழு ஆய்வு, அதன் பிறகான விரிவான விசாரணைக்குப் பிறகு இருவர் உயிரிழப்பு பற்றிய முழு விவரங்கள் தெரியவரும்.” எனக் கூறியுள்ளார்.
பாகனின் உறவினர் சிசுபாலன் நீண்ட நேரம் யானை அருகே நின்று செல்ஃபி எடுத்ததாகவும், அதன் பிறகே யானை அவரை மிதித்துள்ளது என்றும், தடுக்க வந்த பாகனை தாக்கிய யானை, இச்சம்பவத்திற்கு பிறகு பாகன் விழுந்த இடத்தை சோகமாக சுற்றி வந்ததாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.