TIDCO அட்டகாச அறிவிப்பு… குலசையில் புதிய விண்வெளி பூங்கா.!
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.
950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2200 ஏக்கர் பரப்பளவில் இந்த விண்வெளி ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. அதனுடன், 1500 ஏக்கரில் விண்வெளி ஆய்வு மையம். விண்வெளி தொழிற்சாலை மற்றும் விண்வெளி உந்துசக்தி பூங்கா ஆகியவை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான TIDCO அறிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விண்வெளி தொழிற்சாலை மற்றும் விண்வெளி பூங்கா ஆகியவை அமைக்க இஸ்ரோவின் துணை நிறுவனமான இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் TIDCO புரிந்துணர்வு ஒப்பந்தந்தை பதிவுசெய்துள்ளது. தற்போது இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.