துரைசாமிக்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை – கே.பி.முனுசாமி
துரைசாமிக்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அண்மையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் .பின்னர் வி.பி.துரைசாமி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்வதாக தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்தார்.
இதனிடையே நேற்று காலை கமலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி எனவும் பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என கூறினார்.
மத்தியில் ஆட்சி இருப்பதால் பாஜக தலைமையில் தான் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என தெரிவித்தார். அதிமுக VS திமுக என்று இருந்த நிலையில் தற்போது பாஜக VS திமுக என மாறிவிட்டது என்று வி.பி.துரைசாமி கூறினார்.இவரது கருத்து அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை, ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி,சட்ட அமைச்சர் அமைச்சர் சி.வி. சண்முகம் , வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பாஜகவுடன் கூட்டணி என்று யார் சொன்னது,அந்த கட்சியின் மாநில தலைவரா ?அல்லது அந்த கட்சியின் தேசிய தலைவரா என்று கேள்வி எழுப்பினார்.நேற்று வரை ஒரு கட்சியில் இருந்தவர்,அதற்கு முன்பாக இன்னொரு கட்சியில் இருந்தவர்.ஏதோ கட்சிக்கு சென்றதும் அரசியல் ஆதாயம் தேட இவ்வாறு சொல்லி இருக்கிறார் .வி.பி.துரைசாமிக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை .அவருக்கு பாஜக அந்த அதிகாரத்தை கொடுத்துள்ளதா என்றும் தெரிவித்துள்ளார்.