3 ஏ.டி.எம் கொள்ளை., ரூ.65 லட்சம் பணம்.! கேரளா போலீஸ் பரபரப்பு தகவல்கள்…
திருச்சூரில் 3 ஏ.டி.எம்களில் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழக போலீஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளது என கேரளா காவல் ஆய்வாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை தமிழக போலீசார் துரத்தி பிடித்து, அப்போது ஏற்பட்ட மோதலில் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து சேலம் சரக டி.ஐ.ஜி உமா கூறுகையில், கேரளா மாநிலம் திருச்சூரில் கொள்ளையடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு இந்த கும்பல் தப்பி வந்துள்ளது என்றும், அவர்களை பிடிக்க முயலும் போது ஒரு கொள்ளையன் இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளான். அவனை தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் உயிரிழந்துவிட்டான் என்றும், இன்னொரு நபர் மீது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ” என்றும் தகவல்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, நாமக்கல் விரைந்த கேரளா போலீசார் அங்கு காவலில் வைக்கப்பட்டிருந்த கொள்ளையர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் கேரளா காவல் ஆய்வாளர் பேசுகையில், ” இன்று அதிகாலை திருச்சூரில் 3 ஏ.டி.எம்களில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் பற்றி தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். தமிழ்நாடு காவல்துறையினர் சிறப்பாக நடவடிக்கை எடுத்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்று துல்லியமாக தெரியவில்லை. தோரயமாக ரூ.65 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் இன்று அதிகாலை 2 மணி முதல் 3.30 மணிக்குள் நடைபெற்றுள்ளது. பல்வேறு ஏ.டி.எம் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதனை இவர்கள் தான் செய்தார்களா என்று தெரியவில்லை. நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
திருச்சூர் கிராம பகுதியில் ஒரு எஸ்.பி.ஐ ஏடிஎம், திருச்சூர் நகரத்திற்குள் 2 ஏ.டி.எம்கள், மொத்தம் 7 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்று கேரளா காவல் ஆய்வாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.