திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முக்கிய 3 முடிவுகள்.! 7 மாநிலங்களில் 29 கட்சிகளுக்கு முதலமைச்சர் கடிதம்!
திமுக அமைச்சர்கள் கூட்டத்தில் நிதிப்பகிர்வு, மும்மொழிக்கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன.

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதா நிறைவேற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தொடரில் பங்கேற்கும் போது என்னென்ன விஷயங்கள் பற்றி பேச வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் திமுக எம்பிக்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
மேலும், திமுக அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இதில் முக்கியமாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன.
- நிதிப்பகிர்வு, மும்மொழிக்கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனைத்து முயற்சிகளிலும் முழுமையாக துணை நின்று நாடாளுமன்றத்திலும் இவற்றை முன்வைத்து போராடி வெற்றியை ஈட்ட வேண்டும்.
- மக்களவை தொகுதி மறுசீரமைப்பினால் தங்கள் மாநில தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து இந்த போராட்டத்தில் களம் காண வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
- தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் 7 மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கு தமிழ்நாடு முதலமைசர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் எனவும் , ஒவ்வொரு கட்சிக்கும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க ஒரு எம்பி மற்றும் ஒரு அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு அனுப்பிவைக்கப்பட உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.