ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் கனவில் மண் அள்ளி போட்டிருக்கிறார்கள் – தினகரன் அறிக்கை
வயர்மேன் ,ஹெல்பர் போன்ற வேலைகளுக்குச் செல்லலாம் எனக் காத்திருக்கும் ஐ.டி.ஐ படித்த ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் கனவிலும் இந்த ஆட்சியாளர்கள் மண் அள்ளி போட்டிருக்கிறார்கள் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள உதவியாளர், வயர்மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதன் மூலமாக தனியாருக்கு 12,000 இடங்கள் செல்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இந்த பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் 3 ஆண்டுகள் பணி வழங்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே இனி ஐ.டி.ஐ படித்தவர்கள் அரசின் தனியார்மய நடவடிக்கையால் நேரடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வயர்மேன் பணியிடத்தில் சேர முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்வாரிய பணியிடங்களை நிரப்புவதைத் தனியாரிடம் ஒப்படைக்கும் பழனிசாமி அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது.
இதனால் மின்வாரியத்தில் வயர்மேன் ,ஹெல்பர் போன்ற வேலைகளுக்குச் செல்லலாம் எனக் காத்திருக்கும் ஐ.டி.ஐ படித்த ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் கனவிலும் இந்த ஆட்சியாளர்கள் மண் அள்ளி போட்டிருக்கிறார்கள்.முதலமைச்சரும், அவருக்கு நெருக்கமான அந்தத் துறையின் அமைச்சரும் மின்துறை வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கு அடுத்தடுத்து இழைக்கப்பட்டு வரும் இந்த அநீதிக்கு துணை போவது ஏன்?, அதன் பின்னணி என்ன? என்பன போன்ற சந்தேகங்கள் மக்களிடம் ஏற்பட்டிருக்கின்றன.மக்களின் அத்தியாவசிய தேவையான மின்விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகளைக் கூட நேரடியாக மேற்கொள்ள முடியாத அளவுக்கு திறனற்றதாக தமிழக மின்சாரத்துறை மாறிவிட்டதா?மின்வாரியத்தை மொத்தமாக தனியாருக்கு தாரை வார்த்துவிடுவார்களோ? என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.டெண்டர் மூலம் தனியாரிடம் ஒப்படைத்து , அந்தப் பணிகளுக்கு அவர்கள் வழியாக ஊழியர்கள் நியமிப்பதைக் கைவிட வேண்டுமென பழனிசாமி அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்வாரிய பணியிடங்களை
நிரப்புவதைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு: பழனிசாமி அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது! pic.twitter.com/QjEkCV7VOU— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 18, 2020