பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருவிழா.!
முருகப்பெருமானின் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய திருவிழாவான தைப்பூச திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் பெற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய திருவிழாவான தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு சுவாமி அஸ்திரத்தேவருக்கு சண்முகவிலாச மண்டபத்தில் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அஸ்திரத்தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. காலை 10.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமி அலைவாயுகந்தபெருமான் சப்பரத்தில் எழுந்தருளி வடக்குரதவீதியில் தைப்பூச மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலையில் அங்கிருந்து சுவாமி எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்தார். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினத்திலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்தனர். பக்தர்கள் அலகு குத்தியும், காவடி, பால்குடம் எடுத்து குழு குழுவாக கோயிலை வலம் வந்தனர். இதனால் கோயில் வளாகத்திலிருந்து நாலாபுறமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சில பக்தர்கள் அதிகாலையிருந்து கிரி பிரகாரத்தில் அங்கபிரதட்சணம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
பின்னர் பக்தர்கள் கட்டண தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் கடற்கரை, சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தியும், பஜனை பாடல்களை படியும் வலம் வந்தனர். அதேபோல் கடற்கரையில் மணல் கோபுரம் எழுப்பி சூடம் ஏற்றி வழிபட்டனர். பால் குடம் மற்றும் காவடி எடுத்து வந்த பக்தர்கள் கோயில் முகப்பில் ஆடிப்பாடிய கோலாகலமாக கொண்டாடப்பட்டனர். கடலில் பக்தர்களுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு படகில் மீட்புக் குழவினர் நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் கோவிலை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது என குறிப்பிடப்படுகிறது.