திமுகவுடன் சேர்ந்து தமிழ் இனத்தையே கொன்றவர்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ் இனத்தையே கொன்றுவிட்டு, இன்றைக்கு தமிழன் என்று பேசினால் நம்பவே மாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.
டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ஆம் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. பிப்.1-ஆம் தேதி 2022-23 ஆண்டுக்கான நிதிகளை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினர் ராகுல் காந்தி, மாநில கூட்டாட்சி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? ஒவ்வொரு மாநிலத்தோடு பேசுவது, பிரச்சனைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது.
இந்தியாவில் இரண்டு விதமான பார்வை உண்டு. அதில் ஒன்றுதான் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்ற பார்வை. கூட்டாட்சி என்பது அதன் அர்த்தம். தமிழ்நாட்டில் உள்ள என் சகோதரரிடம் நான் சென்று உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்பேன். அவர் அவரது தேவையை என்னிடம் சொல்வார். அதேபோல எனக்கு தேவையானதை கேட்டுப் பெறுவேன், இதுதான் கூட்டாட்சி. இந்தியா என்பது ராஜாங்கம் கிடையாது. பல மாநிலங்களால் இணைந்த ஒன்றியம் என தெரிவித்தார்.
பாஜகவால் தங்களுடைய வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களையும், தமிழகத்தையும் ஆள முடியாது என ஆவேசமாக தெரிவித்த ராகுல்காந்தி, அனைத்து மாநிலங்களையும் ஆள நினைத்தால், அந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றும் கூறினார். தமிழ்நாடு மனம் தளராமல் மீண்டும் மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கோரிக்கை வைக்கிறது. ஆனால் மத்திய அரசு அதை மறுத்து விரட்டி அடிக்கிறது. அனைத்து மாநில மக்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும்.
தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை, அவற்றுக்கு மத்திய அரசு மதிப்பு அளித்து சம உரிமை வழங்க வேண்டும் என்றும் இந்தியா இரண்டாக பிரிந்து உள்ளது. ஒரு இந்தியா பணம் படைத்தவர்களுக்காகவும், மற்றொரு இந்தியா பணம் இல்லாத ஏழைகளுக்கானதாகவும் உள்ளது எனவும் குறிப்பிட்டார். மேலும், தனது உரையை முடித்து நாடாளுமன்ற வளாகத்தைவிட்டு வெளியேவரும் போது, தமிழகத்தை குறிப்பிட்டு அதிகமுறை பேசியது ஏன் என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ‘நான் ஒரு தமிழன்’ என்று பதில் அளித்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதன்பின்னர் செய்தியாளராகலிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராகுல்காந்தி தமிழர் என்று சொல்வதற்கே முகாந்திரம் இல்லை. ஒட்டுமொத்தமாக திமுகவுடன் சேர்ந்து தமிழ் இனத்தையே கொன்றவர்கள். இதை வரலாறே மன்னிக்காது. ஒன்றரை லட்சம் தமிழர்களின் ஆன்ம மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ் இனத்தையே கொன்றுவிட்டு, இன்றைக்கு தமிழன் தமிழன் என்று பேசினால் தமிழன் நம்பவே மாட்டேன் என்றும் தெரிவித்தார்.