“தினகரனை நம்பி போனவர்கள் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும்” – முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்
அதிமுக பின்னடைவை சந்திக்க தினகரன் முயற்சி செய்வதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.இதற்கு இடையில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்பு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 11 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இதன் பின் நீண்ட நாட்கள் தனிப்படுத்தப்பட்டிருந்தார்.பின்பு நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து கிளம்பிய சசிகலா நேற்று சென்னை வந்தடைந்தார்.
நேற்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,உறுப்பினர் அட்டை வழங்கும் அதிகாரமே பொதுச்செயலாளரிடம் தான் உள்ளது. புரட்சித்தலைவர் கண்ட அதிமுகவில் ஜெயலலிதா இருந்த வரையும் அதில் உள்ள சட்ட விதிகளில் பொதுச்செயலாளர் தான் எல்லா அதிகாரம் உடையவர். அவர் தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். பொதுச்செயலாளர் தான் ஒருவருக்கு பதவி நியமனம் செய்ய முடியும், பதவியில் இருந்து நீக்கமுடியும்.தற்போது அதை எல்லாம் நீக்கிவிட்டு உள்ளனர்.யாரையே இரண்டு பேரை போட்டுவிட்டு நடத்துவதற்கு இது என்ன கம்பெனியா ? என்றும் பொதுச்செயலாளருக்கான சட்டப்போராட்டத்தை சசிகலா தொடர்வார் என்றும் கூறினார்.
இந்நிலையில் நேற்று வேலூரில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுக பின்னடைவை சந்திக்க சில பேர் முயற்சி செய்கின்றனர். இதில் ஒருவர் தினகரன்.10 ஆண்டுகளாக கட்சியிலே கிடையாது.ஜெயலலிதா அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தினகரனை நீக்கி வைத்திருந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒரே கட்சியில் இணைந்து கொண்டதாக அறிவித்துக்கொண்டார்.அதிமுகவை கைப்பற்ற தினகரன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.எங்களது எம்எல்ஏக்கள் 18 பேரை பிடித்து வைத்துக்கொண்டார்.18 பேரையும் நடுரோட்டில் விட்டுவிட்டார். தினகரனை நம்பி போனவர்கள் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்று பேசியுள்ளார்.